சென்னை ஐ.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை

சென்னை, செப்டம்பர்-30

சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தியாகத்தினாலும், உழைப்பினாலும் மாணவர்கள் பிரகாசமான உயர்ந்த நிலையை அடைகின்றனர். மாணவர்களின் வெற்றியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த பங்கு உள்ளது.

உலகின் மிகவும் மூத்த மொழியான தமிழ் பேசக் கூடிய மாநிலத்தில் நாம் இருக்கிறோம். இந்திய இளைஞர்கள், இளம் பெண்கள் மீது ஒட்டு மொத்த உலகமே எதிர்பார்ப்புடன் உள்ளனர். உலகம் முழுவதும் இந்திய மக்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற முனைப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள், இளம் பெண்கள் அதற்கு தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

இந்தியாவின் தனித்துவமான கண்டுபிடிப்புகள் சர்வதேச சந்தையில் எதிர்காலத்தில் உரிய இடத்தை பெற வேண்டும். மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க முக்கிய கல்வி நிறுவனங்களில் அடல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்த மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடுமையான முயற்சி மற்றும் உழைப்பு தான் சாத்தியம் இல்லாததை சாத்தியமாக்கும். எப்போதுமே சவாலான விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள், உங்களுக்கு நீங்களே சவலாக இருங்கள். எங்கு பணியாற்றினாலும், எங்கு வசித்தாலும் உங்களது தாய்நாடு குறித்து மறந்துவிடாதீர்கள். வாழ்க்கை முறையால் ஏற்படும் நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு தீர்வு காண மாணவர்கள் முன்வர வேண்டும். இளைஞர்கள், இளம் பெண்கள் பணியில் கவனமாக இருந்தாலும் உடல் நிலையில் கவனம் செலுத்துவதில்லை. இந்திய இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *