ரத்ததானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்-முதல்வர் வேண்டுகோள்

செப்டம்பர்-30

தமிழ்நாடு 100 சதவீத இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரத்ததானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ் நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, தமிழ் நாட்டில் தன்னார்வ ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் மீம்ஸ் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கினார்கள். அத்துடன், ஆண்டுதோறும் தன்னார்வ ரத்த கொடையாளர்கள், சிறப்பாக பணியாற்றும் ரத்ததான முகாம் அமைப்பாளர்கள், அரசு ரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு, பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கவுரவித்து வருகிறது.

அம்மாவின் வழியில் செயல் படும் தமிழக அரசு, தானமாக பெறப்படும் ரத்தத்தை சிறந்த முறையில் பாதுகாத்து பயன்படுத்தும் வகையில், ரத்ததான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தை, ரத்த வங்கிகளுக்கு எடுத்து சென்று சேமிக்க, குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீனநடமாடும் ரத்த ஊர்திகளை வழங்குதல், அரசு ரத்த வங்கிகளில் ரத்தத்தை சேமிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களின் வெப்ப நிலையினை கண்காணிக்க டேட்டா லாக்கர் பொருத்துதல், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அரசு ரத்த வங்கிகளில் பணிபுரியும் ஆய்வக நிபுனர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தல் போன்ற திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 9,16,929 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்ததானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *