தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பானது-பிரதமர் மோடி
சென்னை, செப்டம்பர்-30
மாபெரும் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது சென்னை நகரம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், ஏராளமான பா.ஜ.க.வினரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பிறகு, சென்னை ஐ.ஐ.டி.க்கு சென்ற பிரதமர் மோடி சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் கைவிடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து ஐ.ஐ.டி.யில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, என்னைப் பொறுத்தவரை இங்கு கூடியிருப்பவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் எனக்கூறி, முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சென்னை மற்றும் தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பானது என பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, இட்லி, சாம்பார், வடை ஆகிய உணவுகள் எப்போதும் உற்சாகம் தரக்கூடியவை என்றார். இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மிகச்சிறந்த கலாச்சாரம், மாபெரும் பாரம்பரியம், சிறந்த உணவு வகைகளை கொண்டது தான் சென்னை நகரம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். சிற்பங்களுக்கு பெர்யர்போன மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களை வெளிநாட்டு மாணவர்களும் வந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.