தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 124ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, மார்ச்-31

தமிழகத்தில் ஏற்கனவே 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 50 பேரும் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சென்னையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள். தமிழகத்தில் இருந்து 1,500 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில், 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். மற்றவர்கள் அங்கேயே இருந்துள்ளனர். இந்த 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களே தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதித்தவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராகவே உள்ளது.” என்றார்.

இதன்மூலம் தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *