கொரோனா குறித்த போலி செய்திகளை தடுக்க 24 மணி நேரத்துக்குள் இணையதளம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை

கொரோனா வைரஸ் குறித்து பொய் செய்திகள் பரவுவதை தடுக்க 24 மணி நேரத்திற்குள் இணையதளம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, மார்ச்-31

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் புலம்பெயரும் தொழிலாளர்களின் நலன் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கேரளா மற்றும் மேற்கு வங்க எம்பி.க்கள் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி நாகேஸ்வர ராவ் ஆகியோர், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது நாடு முழுவதும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் மருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும், அந்த முகாம்களை நிர்வகிக்கும் கடமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சனையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் மேலும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அரசு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

மேலும், போலி செய்திகள் மூலம் பரவி வரும் பீதியை எதிர்கொள்ளவும், போலி செய்திகளை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த நிகழ்நேர தகவல்களை வெளியிடுவதற்காகவும், 24 மணி நேரத்திற்குள் மத்திய அரசு ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *