கொரோனா வார்டாக கலைஞர் அரங்கத்தை பயன்படுத்திக் கொள்ள மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான ஒப்புதல் கடிதத்தை திமுக எம்.எல்.ஏ.க்களான சேகர்பாபுவும், மா.சுப்பிரமணியனும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை நேரில் சந்தித்து வழங்கினர்.

சென்னை, மார்ச்-31

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 31) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அறிவாலயத்தின் வளாகத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள, அரசு சார்பில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திமுக அறக்கட்டளையின் தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இக்கடிதத்தை சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏவும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபுவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜி.பிரகாஷிடம் நேரில் சந்தித்து அளித்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், நடிகர் பார்த்திபன் போன்றவர்கள் தங்கள் இல்லத்தை கொரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் தெரிவித்திருந்த நிலையில் ஸ்டாலினும் கலைஞர் அரங்கை அர்ப்பணித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *