தமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் ?

சென்னை ஆகஸ்ட் 27

தமிழ்நாட்டில் வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் இருந்த மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து 2016 நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. இந்த தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, உள்ளாட்சி அமைப்புகளில் எஸ்.சி. எஸ்.டி., பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு செய்யவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை ஏற்று உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழக தேர்தல் ஆணையம் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு இந்த வழக்கு நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள், திட்டங்களை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதனால் உள்ளாட்சி நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளுக்கும் மின்னணு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சி, 123 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும், 12,524 ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றிய அமைப்புகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *