கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள முதியோர்களுக்கு மத்திய அரசு அறிவுரை

கொரோனா பாதிப்பில் இருந்து முதியோர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான அறிவுரைகளை மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ளது.

டெல்லி, மார்ச்-31

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். 1000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலால் முதியோர் அதிகம் பாதிப்படைவதால் அவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

முதியோர்கள் செய்ய வேண்டியது என்ன?

  • முதியோர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாக்க அவர்கள் அடிக்கடி கைகள் மற்றும் முகத்தை சோப்பு போட்டு கழுவவேண்டும். வீட்டை விட்டு கட்டாயம் வெளியேறக்கூடாது. பிறரை சந்திப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும். சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சந்திப்பவர்களுக்கும் முதியோருக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி இருப்பது அவசியம்.
  • சாப்பிடும் உணவில் போதுமான ஊட்டச்சத்து இருப்பதை உறுதி செய்யவேண்டும். இதற்காக அப்போதே தயாரித்த மற்றும் சூடான உணவை சாப்பிடவேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அடிக்கடி பழச்சாறுகளை அருந்தலாம். இது தவிர அவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகளைகளையும் சாப்பிட மறக்க கூடாது.
  • காட்டராக் எனப்படும் வெண்புரை கண் ஆபரேஷன், மூட்டு ஆபரேஷன் ஆகியவற்றை தள்ளிவைப்பது நல்லது. காய்ச்சல், சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அவர்கள் தரும் ஆலோசனைப்படி நடக்கவேண்டும்.

முதியோர் என்ன செய்யக்கூடாது?

  • காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்படுவோர் அருகில் முதியோர்கள் செல்லக்கூடாது. இருமலோ தும்மலோ வந்தால் முகத்தை டிஷ்யு பேப்பர் கொண்டு மூடிக்கொள்ளவேண்டும். வெறுங்கையால் தும்மலை தடுப்பது கூடாது.
  • எந்த சூழ்நிலையிலும் சுயமருத்துவம் செய்துகொள்ளக்கூடாது. வழக்கமான மருத்துவ சோதனைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு டாக்டரிடம் ஆலோசனை பெறலாம்.
  • கூட்டம் அதிகமுள்ள பூங்காக்கள், சந்தைகள், மதவழிபாட்டுத்தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *