கொரோனாவுக்கு எதிராக போராடும் தொண்டு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள், அதில் பணிபுரியும் தன்னாா்வலா்களும் சிறப்பாக பணியாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

டெல்லி, மார்ச்-31

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சுகாதாரப் பணி, வீடற்ற மக்களுக்கு உணவு அளிப்பது, கைசுத்திகரிப்பான், முகக்கவசங்களை தயாரித்து அளிப்பது, விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுபோன்ற தொண்டு நிறுவனத்தினருடன் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை காணொலி காட்சி முறையில் உரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஈடுபட்டுள்ள இந்த முக்கியமான நேரத்தில் அந்த நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது, மக்களின் தவறான நம்பிக்கைகளை முறியடிப்பது போன்ற பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில் சமூக விலகல் விதிகளை மறந்து மக்கள் ஒன்றுகூடும் வழக்கம் இப்போதும் உள்ளது. இப்போதைய சூழ்நிலையில், இதுபோன்ற செயல்கள் தவறு என்று அவா்களிடம் விளக்குவது அவசியம். ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவது, தேவையானவா்களுக்கு மருந்துப் பொருள்களை கொண்டு செல்வது போன்ற பணிகளில் தன்னாா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு எனது பாராட்டுகள். முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான சூழலை நாடு சந்தித்துள்ளது. இந்த நேரத்தில் தொண்டு நிறுவனங்களின் சேவை முக்கியமானது.
ஏழை மக்களுக்கு சேவை செய்வதே நாட்டுக்காக மேற்கொள்ளும் முக்கியமான சேவை என்று மகாத்மா காந்தி கூறியுள்ளாா். தன்னாா்வலா்களின் அா்ப்பணிப்பு உணா்வும், சேவை மனப்பான்மையும் பாராட்டுக்குரியது.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *