அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

ஊரடங்கு நேரத்தில், அத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மார்ச்-31

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. பால், மருந்து, மளிகை போன்றவற்றை விற்கவும், விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் சமூக விலகல் அறிவுறுத்தலால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் காவல்துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்கின்றனர் என்றும், சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்யலாமே தவிர அவர்களை தண்டிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த வழக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் திருஞானசம்பந்தம் என்பவர் திநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பதில் அளித்தார்.
மேலும் அரசினுடைய கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் வீடியோ கால் மூலம் நீதிபதிக்கு பதிலளித்தார். அப்போது, எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை; இதுவரை ஊரடங்கை மீறியவர்கள் மீது 17 ,118 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

இருதரப்பு வாதங்களையும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் பெஞ்ச் வீடியோ கால் மூலம் கேட்டறிந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், நாங்கள் குறிப்பிட்ட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றாலும் நடுநிலையான அணுகுமுறையை கையாளவேண்டும். மனித உணர்வு மதிக்கப்பட வேண்டும், இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய பிரிவு 21 கீழ் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது. தமிழகத்தில் கடை கோடி சராசரி மனிதன் இதனால் பாதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர். அத்துடன் ஊரடங்கை மீறி பொதுமக்கள் சாலைகளில் வந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *