2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23-ந்தேதி தொடங்கும் என அறிவிப்பு
கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு, ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச்-31

ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி’ஜெனிரோவில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருந்ததால் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் இதில் நேரடியாக பங்கேற்கலாம். இதுவரை 57 சதவீதம் பேர் தகுதி பெற்று இருந்தனர்.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஜூலை மாதம் 23-ந்தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக் ஆகஸ்ட் 24-ந்தேதி முதல் செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது.