ஊரடங்கினாலும் உணவளிக்கும் அம்மா உணவகங்கள்..!

புயல் அடித்தாலும், வறட்சி வாட்டினாலும், வெள்ளம் வந்தாலும், நோய் பரவினாலும் அசராமல் அன்னமளிக்கும் அட்சய பாத்திரமாக இருப்பது அம்மா உணவகங்கள். நகர்ப்புற ஏழைகளும், கிராமப்புற ஏழைகளும் பசியோடு தூங்க செல்லக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம்.

தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த திட்டம் இப்போதும் மக்கள் செல்வாக்குடன் உள்ளது. காலை உணவாக இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மதிய உணவாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இரவு உணவாக பருப்பு கடைசலுடன் 2 சப்பாத்திகள் 3 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் தற்போது 407 அம்மா உணவகங்கள் இயங்குகின்றன. ஒரு வார்டுக்கு 2 என்ற அடிப்படையில் அரை கிலோ மீட்டர் இடைவெளியில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அம்மா உணவகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் முழு வீச்சில் இயக்கப் படுகின்றன. சென்னையில் ஒரு அம்மா உணவகத்தில் ஒரு நாளைக்கு 3000 முதல் 4000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 12 லட்சம் பேருக்கு மேல் உணவு சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் பெரும்பாலும் , ஏழை, எளியோர், வீடற்றோர் மட்டுமின்றி வேலைவாய்ப்புக்காக வந்த வெளி மாநில தொழிலாளர் களுக்கு அம்மா உணவகம் தான் கண் கண்ட தெய்வமாக காட்சியளிக்கிறது. இதற்காக அனைத்து அம்மா உணவ பணியாளர் களுக்கும், மாநகராட்சி சார்பில் தனியாக உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக முழு ஈடுபாட்டுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் தலைநகர் மட்டுமல்ல, வேறு எந்தப் பகுதியிலும் மக்கள் பசியோடு தவிக்கக் கூடாது , அவர்களுக்கு பசியாற்ற அம்மா உணவகங்கள் தாயாக செயல்பட வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S .P. வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

அவரது ஆணைப்படி ஈரோடு மாநகராட்சி சார்பில் 3 அம்மா உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்குகிறது. உள்ளாட்சித் துறையின் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கப்படுகிறது. உள்ளாட்சித் துறை மட்டுமே இந்த காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் வீதிக்கு வீதி மக்கள் வசிக்கும் இடங்களில் தூய்மைப் பணியிலும், மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் பம்பரமாக சுழன்று செய்து வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் அம்மா உணவகத்தை நிர்வகிக்கும் பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள். தூய்மையாகவும், தரத்தில் சமரசமின்றி தயாரிக்கப்படும் உணவு வகைகள், வாடிக்கையாளர்களை நிறைவு செய்யும் வகையில் உள்ளன.

வீட்டில் சமைப்பது போன்று அம்மா உணவகங்களில் சமைக்கப்படும் உணவு வகைகளையே அங்கு பணிபுரிபவர்களும் சாப்பிடுகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவும் காலம் என்பதால், அம்மா உணவகங்களில் பணியாற்றும் எல்லோரும் முகக் கவசம், கையுறை என முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படுகிறார்கள். அம்மா உணவகத்தை ஆரம்பத்தில் கடுமையாக விமர்சனம் செய்த பலர் வாயடைத்து நிற்கிறார்கள். காரணம் , ஆபத்து காலத்தில் அன்னையாக உணவளிப்பது அம்மா உணவகம் தான் என்பதை 2016ம் ஆண்டு தாக்கிய வார்தா புயலின் போது உணர்ந்து விட்டார்கள். அந்த நேரத்தில் அம்மா உணவகம் மட்டுமே லட்சக்கணக்கானோருக்கு உணவளித்தது.

அதற்கு பிறகு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பித்த நிலையில், பசியால் தவிப்போர் அனைவரும் ஆனந்தக் கண்ணீருடன் அம்மா உணவகத்தை கையெடுத்து கும்பிடுகிறார்கள்.கடந்த 7 ஆண்டுகளாக லாபமின்றி செயல்படும் அம்மா உணவகங்கள், விலையேற்றம் இல்லாமல் தொடர் இழப்பை சந்தித்தாலும் மக்கள் பசியாற்றும் சேவையாக தமிழக அரசு அம்மா உணவகங்களை நடத்தி வருகிறது. ஏழை ,எளியோர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் அம்மா உணவகத்தை இப்போது நாடுகிறார்கள். நெருக்கடியான காலகட்டத்தில், சுடச்சுட உணவு வழங்குவதை அம்மா உணவகங்கள் கடமையாக வைத்துள்ளன.

வைரஸ் பரவுதலை தடுக்க அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வருபவர்களுக்கு, சமூக விலகலை கடைப்பிடிக்க கட்டாய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சில இடங்களில் செயல்படும் நடமாடும் அம்மா உணவகங்கள், அரசு காப்பகங்களில் தங்கியிருப்பவர்களுக்கு நேரடியாக சென்று உணவு வழங்கி வருகிறது. சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்படும் நிலையில், தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. உள்ளாட்சி துறை பணியாளர்கள், வீதிகளை மட்டும் சுத்தமாக்கவில்லை, அம்மா உணவகங்கள் மூலம் வீட்டில் இருப்பவர்களின் பசியையும் போக்குகிறார்கள். இதுவரை ஏழைகளின் உணவகங்களாக இருந்த அம்மா உணவகங்கள் , மக்களின் உணவகங்களாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *