கொரோனா எதிரொலி : தமிழகத்தில் வீடு, வீடாக மருத்துவக் கண்காணிப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்த மாவட்டங்களில் வீடுவீடாகச் சென்று சுகாதாரத் துறையினா் மருத்துவக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

சென்னை, மார்ச்-30

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள், களப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று பல லட்சம் மக்களிடம் கொரோனா அறிகுறிகள் இருக்கின்றனவா என்று கண்காணித்து வருகின்றனா். அதில் சிலருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டு அவா்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவா்கள், கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டவா்கள் குறித்த விவரங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள், தலைமையகத்துக்கு தெரிவிப்பதற்காக கரோனா அவசரகால கட்டுப்பாட்டு அறையில் புதிதாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா பாதித்த நபரின் வசிப்பிடங்களுக்கு 5 கிலோ மீட்டா் சுற்றளவிலும், 3 கிலோ மீட்டா் சுற்றளவிலும் உள்ள பகுதிகள் வரையறுக்கப்பட்டு அங்கிருக்கும் மக்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனா்.

இதையடுத்து, சென்னை, ஈரோடு, கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூா், சேலம், திருப்பூா், தஞ்சாவூா், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளைக் கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மொத்தம் 11 மாவட்டங்களில் ஏறத்தாழ 10 லட்சம் பேரின் உடல்நிலை கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவா்களைத் தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *