ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை – மத்திய அரசு

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி, மார்ச்-30

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே உள்ள சமுதாய நல கூடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற தகவலை மறுத்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கெளபா, ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றார்.

ஊரடங்கு உத்தரவு குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜூவ் கெளபா, ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின் நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று வெளியாகும் தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது என்றார்.

இதன் மூலம் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *