வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை பணிபுரியும் நிறுவனங்களே ஏற்படுத்தித் தர முதல்வர் உத்தரவு

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதியை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, மார்ச்-29

கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டார். முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. உங்களுக்கு அனைவருக்கும் என் வேண்டுகோள், மக்கள் இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்து வீட்டிற்குள் இருக்க வேண்டும். நாம் பொறுப்பான குடிமகன்களாக இருக்க வேண்டும். நம்மையும், நம்முடைய சமுதாயத்தையும் நாம் காக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்துள்ளவர்கள் அவர்களாகவே முன் வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி, ஒன்றாக வேறுபாடு இன்றி இதற்கு எதிராக போராட வேண்டும். அடிக்கடி கையை சுத்தமாக கழுவ வேண்டும். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.இருமும் போதும், தும்மும் போதும் முகத்தை மூடிக்கொள்ளவும்.

அத்தியாவசிய தேவைக்காக வீட்டிற்கு வெளியே சென்றால் கை, கால்கள், முகத்தை நன்றாக கழுவுங்கள். மாநிலத்தின் முழுவதும் மக்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இருப்பினும் சில இடங்களில், குறிப்பாக மீன் அங்காடி, இறைச்சி கடை, காய்கறி கடைகளில் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை கடுமையாக செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீவிர சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள், இத்தகைய நோய் உள்ளவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். வருகின்ற இரு மாதங்களில் பிரசவிக்க உள்ள சுமார் 1.5 இலட்சம் தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து தனிகவனம் செலுத்துமாறு மருத்துவ அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வெளி மாநிலத்தை சார்ந்த தொழிலாளர்கள் அவர்கள் முன்பு பணியிலிருந்த இடங்களிலிருந்து வெளியேறி இதர நகரங்களுக்கோ ரயில் பயணம் மேற்கொள்ள ரயில் நிலையங்களுக்கோ வந்து வெளியில் இருந்தால், அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைத்து உணவு, மருத்துவவசதி செய்து தருமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதர மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் அனைத்தும் முன்பு வேலைபார்த்த நிறுவனங்களே தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். தற்போதுள்ள இருப்பிடம் நெருக்கடியாக இருப்பின் மாற்று தங்கும்வசதி ஏற்படுத்தி தர உத்தரவிடப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு, தற்காலிக இருப்பிடம், மருத்துவ வசதிகளை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்டு 9 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *