ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்களுக்கு தனிமை – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

ஊரடங்கு உத்தரவை மதிக்காதவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, மார்ச்-29

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், நெடுஞ்சாலைகளில் மக்கள் நடந்து செல்ல தடை விதிக்க வேண்டும். மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை முழுமையாக மூட வேண்டும். இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும். இடம் பெயர்ந்து பணியாற்றிவரும் தொழிலாளர்களை வெளியேறக் கூறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம்பெயர்ந்து படித்து வரும் மாணவர்களையும் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள் தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஊரடங்கு ஆணையைத் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *