தமிழகத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான தடையை நீக்கி அரசு உத்தரவு

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மார்ச்-29

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய தேவைகளுக்கு தமிழகத்தில் நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாய பொருட்கள் பெருமளவில் வீணாகி சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. விவசாயத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விவசாய பொருட்கள் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், உர விற்பனை நிலையங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு மற்றும் பேக்கிங் நிறுவனங்கள், விவசாய இயந்திரங்கள் வாடகை மையங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயம், விவசாய கூலிப்பணிகளுக்கான தடையை நீக்கியுள்ள தமிழக அரசு, விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களை இயக்குவதற்கான தடையையும் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாயப் பொருட்கள் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *