ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததற்காக மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது என்றும், ஊரடங்கு உத்தரவுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லி, மார்ச்-29

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவை தடுப்பது என்பது வாழ்வா சாவா போராட்டம் போன்றது. மக்கள் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும். நான் எடுத்த இந்த கடினமான ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். வீட்டில் முடங்கி இருப்பதின் சிரமம் புரிகிறது. நீங்கள் என் மீது கோபத்தில் இருப்பதை நான் அறிவேன். ஆனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் இந்த சூழலில் கொரோனா நோய்த்தொற்று பரலை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழியில்லை. கொரோனா குறித்த வதந்தியை நம்ப வேண்டாம். விதிகளை மீறி வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம். சட்டத்தை, உத்தரவுகளை மீறி வெளியே வரும் சிலரால் நாம் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் மக்களின் உயிரோடு விளையாடி வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் ஹீரோக்கள். 2020 செவிலியர்களுக்கான ஆண்டாக அமைந்து விட்டது, உங்களுடைய சேவைக்கு ஈடு இணையே இல்லை. மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாராட்டுகள், வீர வணக்கங்கள். நீங்களும் கவனமாக இருங்கள். கொரோனா மனித குலத்திற்கே சவாலான ஒன்று, கொரோனாவை முற்றிலும் ஒழிப்போம் என முழு நம்பிக்கை உள்ளது, பயப்பட வேண்டாம்.
அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் ஊழியர்கள், ஓட்டுநர்கள், வங்கி ஊழியர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள், இல்லையென்றால் கட்டாய தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படலாம். தேச நலனை கருதி வீட்டிலேயே இருங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *