பிரபல நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்

பிரபல நாட்டுப்புற பின்னணி பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77.

மதுரை, மார்ச்-29

மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் பிரபலமான இவர், தூள் என்ற படத்தின் மூலம் சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி… என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர்.
இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

25 படங்கள் வரை நடித்த அவர், 77 வயதான நிலையில், சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் கடும் வறுமையிலும், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியானதை அடுத்து, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலர் உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பில் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை பரவை முனியம்மாவின் இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *