தமிழக எல்லைக்கு வந்தது கிருஷ்ணா நீர்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர்தூவி வரவேற்பு

திருவள்ளூர், செப்டம்பர்-28

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. இதனை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆந்திர மாநில முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.. 

இதைத் தொடர்ந்து, 25-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. முதலில் 1,000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர், பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 152 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 28-ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜூரோ பாயிண்டை வந்தடைந்தது.

தமிழக எல்லைக்கு வந்த கிருஷ்ணா நீரை ஊத்துக்கோட்டையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர். இதில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மழைபொழிவு தொடர்வதால், முன்கூட்டியே கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்துவிட்டது. எதிர்காலத்தில், சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சர் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *