தமிழகத்தில் 42வது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மார்ச்-28

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவக் கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொரோனா சிகிச்சைக்காக 17, 000 படுக்கைகள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 மாவட்டங்களிலும் வீடு வீடாகச் சென்று இருமல், சளி காய்ச்சல் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருந்தால் சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க அறிவுறுத்தப்படும். லேசான அறிகுறி இருக்கும்பட்சத்தில் மாஸ்க் போன்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் என்றார்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. ராஜபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ராஜபாளையத்தை சேர்ந்தவர் மதுரை மருத்துவ கல்லூரியிலும், சென்னையை சேர்ந்தவர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரவித்துள்ளார். இவர்கள் வெளிநாடுகளுக்கு ஏதும் பயணம் செய்தாரா அல்லது வெளிநாட்டில் கொரோனா தொற்றுடன் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தாரா என்ற எந்த விவரம் அதில் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *