தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்தில் உள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்தில் தான் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை. மார்ச்-27

சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; –

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கிடைக்க முழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். முதியோர்கள், கர்ப்பிணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே. கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். சென்னை, மற்றும் கோவையில் கொரோனாவிற்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு மக்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்கே ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *