மருத்துவர்கள், நர்ஸ்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு : நிர்மலா சீதாராமன்

கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லி, மார்ச்-26

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகிய இருவரும் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது ;-

நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்.கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும். இந்தியாவில் எவரும் பசியில் இருக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும். மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு முதலில் உதவிக் கரம் நீட்ட மத்திய அரசு முன்வந்துள்ளது.கொரோனாவுக்கு எதிராக முன்வரிசையில் நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர்.கொரோனாவுக்கு எதிராக போரிடும் மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் அளவிற்கு காப்பீடு செய்யப்படும்.ஒருவேளை துரதிருஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *