கொரோனாவுக்கு சுய மருந்து வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு நீங்கள் சொந்தமாக சிகிச்சையளிக்க முயற்சிக்கக்கூடாது. கொரோனாவை போக்க சுயமாக மருந்து, மாத்திரைகளை சாப்பிடாதீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி, மார்ச்-25

வாரணாசி தொகுதியை சேர்ந்த மக்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வழியாக உரையாடினார். அப்போது அவர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நாடு தழுவிய லாக்டவுனுக்கு பிறகு, இது அவரது முதல் கலந்துரையாடல் நிகழ்ச்சி என்பது முக்கியத்துவமானது. மோடி இந்த உரையாடலின்போது கூறியதாவது:-

வாரணாசியின் எம்.பி.யாக, இதுபோன்ற காலங்களில் நான் உங்களிடையே இருந்திருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் நடக்கும் விஷயங்கள் உங்களுக்குத் தெரியும். இங்கே பிஸியாக இருந்தபோதிலும், நான் வாரணாசி பற்றி வழக்கமான அப்டேட்டுகளை கேட்டு பெற்று வருகின்றேன். இன்று நவராத்திரியின் முதல் நாள், நீங்கள் அனைவரும் பூஜைகள் செய்வதிலும் பிரார்த்தனை செய்வதிலும் பிஸியாக இருக்க வேண்டும். ஆனால் இப்போதும் நீங்கள் என்னுடன் பேச சம்மதித்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த நாட்டின் போரை, நடத்துவதற்கான பலத்தை எங்களுக்குத் தருமாறு ஷைல்புத்ரி தேவியிடம் பிரார்த்திக்கிறேன்.

உண்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள் & வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ், பணக்காரர் & ஏழை என்ற பாகுபாடு பார்க்காது. தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்வதால் கொரோனா தாக்காது என்பது பொய்.

கொரோனா வைரஸைப் பற்றிய சரியான தகவல்களைத் அறிய வாட்ஸ்அப் உடன் இணைந்து அரசு ஒரு உதவி மையத்தை உருவாக்கியுள்ளது. நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தினால், 9013151515 என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்து விவரம் அறியலாம். நீங்கள் இந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் ‘நமஸ்தே’ என்று மெசேஜ் செய்தால், உங்களுக்கு உடனடி பதில் கிடைக்கும்.

மகாபாரதப் போரை, 18 நாட்களில் வென்றனர் பாண்டவர்கள். கொரோனாவுக்கு எதிரான இந்த போர் நிறைவடைய, 21 நாட்கள் ஆகும். இந்த போரை 21 நாட்களில் வெல்வதே நமது நோக்கம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு நீங்கள் சொந்தமாக சிகிச்சையளிக்க முயற்சிக்கக்கூடாது. உங்கள் வீட்டில் பத்திரமாக இருங்கள், மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே எதையும் செய்யுங்கள். அவர்களை அழைக்கவும், அவர்களிடம் கேளுங்கள், உங்கள் வியாதிகளை அவர்களிடம் சொல்லுங்கள். உலகில் எந்த இடத்திலும் இதுவரை, கொரோனாவுக்கு எதிராக, எந்தவொரு தடுப்பூசியும் உருவாக்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இதில் பணியாற்றி வருகின்றனர், பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. யாராவது உங்களுக்கு ஒரு மருந்தை பரிந்துரைத்தால், முதலில் உங்கள் மருத்துவரிடம் தயவுசெய்து பேசுங்கள். மருத்துவரை அணுகிய பின்னரே மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *