வியக்கதக்க வாழ்ந்தவர்கள் தமிழர்கள்-மு.க.ஸ்டாலின்
சென்னை, செப்டம்பர்-28
கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடவசதியை மாநில அரசு விரைவில் அமைத்து தரவேண்டும் எனவும், ஏற்கனவே கீழடியில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கீழடிக்கு சென்று வந்தது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழடியில்தான் நின்றபோது, மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயான் விண்கலம் போல வான் வரை பறந்து உயர்ந்து சென்றது என குறிப்பிட்டுள்ளார்.
2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறப்பான நகர நாகரிகத்தை கடைப்பிடித்து வாழ்ந்ததை கீழடியில் காண முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார். சுட்ட செங்கற்களால் ஆன வீடுகள், சுண்ணாம்புப் பூச்சு, உறுதியான மேற்கூரை, உயரிய நீர் மேலாண்மை என வியக்கவும், வியந்து போற்ற வைக்கும் வகையில் தமிழர்கள் வாழ்ந்திருப்பதை கீழடியில் காண முடிந்தது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடவசதியை மாநில அரசு விரைந்து உருவாக்கி தரவேண்டும் என்றும், கீழடியில் இதற்கு முன்பாக மத்திய தொல்லியல் துறை நடத்தியுள்ள 3 கட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.