370 சட்டப்பிரிவு நீக்கம்: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு

புதுடெல்லி, செப்டம்பர்-28

காஷ்மீருக்கான 370-ம் பிரிவு நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள், வழக்கறிஞர்கள் சார்பில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்தது. அப்போது, இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த அமர்வில் மூத்த நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர். சுபாஷ் ரெட்டி, பிஆர் காவே, சூர்யகாந்த ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *