டெல்லியில் தினக்கூலிகளுக்கு ரூ.5,000 நிவாரணம்: அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி, மார்ச்-23

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ இணைப்பு மூலம் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தச் சூழலை எதிர்கொள்ள அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வழங்கப்படும். கடந்த 40 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக புதிதாக யாரும் கண்டறியப்படவில்லை. 30 பேரில் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் பலியாகியுள்ளார். மற்றவர்கள் குணமடைந்துள்ளனர். இந்தப் போராட்டம் மிக நெடியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் பாதித்தோரின் எண்ணிக்கை கூடலாம். வளர்ந்த நாடுகளே கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளத் திணறுகின்றனர். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது டெல்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உங்களது உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஒருவருக்கொருவர் உதவுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துவருவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் உண்மையான தேசப்பற்று.

ஊரடங்கு மற்றும் முடக்கம் காரணமாக டெல்லியில் யாரும் பசியால் உயிரிழக்கக் கூடாது. நகர் முழுவதும் மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது. தங்குமிடங்களை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உணவு விநியோகத்துக்கும் தனியாக ஏற்பாடுகள் செய்யப்படும். யாரும் உணவில்லாமல் உறங்கக் கூடாது என்று நாம் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *