இந்தியா முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு: பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால். கொரோனா உங்களை தாக்கக் கூடும்.21 நாட்கள் தனிமை இல்லாவிட்டால் குடும்பங்கள் அழிந்துவிடும் என எச்சரித்துள்ள மோடி, உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி, மார்ச்-24

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மீண்டும் ஒருமுறை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேச வந்திருக்கிறேன்.

அடுத்த 21 நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானது. கரோனா வைரஸ் நம்மைத் தாக்காது என யாரும் நினைக்கக் கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இன்றிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்குக்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர யாருக்கும் ஊரடங்கின்போது அனுமதியில்லை.

பிரதமர் முதல் சாதாரண குடிமகன் வரை அனைவரும் ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும். வல்லரசு நாடுகளாலேயே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தந்து நாட்டு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. வீட்டைவிட்டு வெளியே வந்தால் வீட்டிற்கு கரோனா வரும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கப்பூர்வமானதாகப் பயன்படுத்த வேண்டும்.

24 மணி நேரமும் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோரின் சிரமங்களை உணர வேண்டும். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு இந்தியரும் முக்கியம் என்பதாலேய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சுகாதாரமாக இருப்பதன் மூலமாகவே இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.

அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடை இருக்காது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்திட வேண்டும்.

கரோனா சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களுக்காக ரூ. 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது.

மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடித்தால் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த கடினமான சூழலில் அரசு அறிவுரைகளை ஏற்று அனைத்து நாட்டு மக்களும் தங்களைத்தாங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றினால்தான் நாடு கடினமான சூழலில் இருந்து மீள முடியும்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தைகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஊரடங்கு உத்தரவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய மக்களுக்கு நன்றி. வைரஸ் பரவுவதை எதிர்த்து இந்தியா வலிமையாக போராடும் என உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது உங்களை, உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக.எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம். எனவே ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைக்க வேண்டும். பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. எனக்கு மக்களின் பாதுகாப்பே முக்கியம்.

உறவினர்கள் உள்பட வெளிநபர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். மக்கள் சுய கட்டுப்பாடுடன் இல்லையென்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும். கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும். இதன்மூலம் கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். கொரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால்.

சேவைத் துறையில் பணியாற்றுவோரை கையெடுத்து வணங்குங்கள். ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள். கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். இந்த தேசிய பேரிடரை குறைக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. அமைதியும் பொறுமையும் காக்க வேண்டிய தருணம் இது. ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள். கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

ஏராளமானோர் உதவுவதற்கு முன்வந்து கொண்டு இருக்கிறார்கள். உலக சுகாதார மையத்தின் ஆலோசனைப்படி, மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. கொரோனாவை எதிர்கொள்ள ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *