இன்றிரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் மோடி! முக்கிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு முக்கிய உரையை ஆற்றுகிறார். மோடி தனது உரையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி., மார்ச்-24

கொரோனா வைரஸ் தாக்கம் பரவியதை அடுத்து கடந்த19ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் மோடி. அப்போது 22 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மாலை 5 மணிக்கு கைதட்டி மருத்துவ மற்றும் பிற சேவைகளில் உள்ள ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்க கேட்டுக்கொண்டார். ஒட்டுமொத்த நாடும் அப்படியே பின்பற்றியது. ஆனால் மறுநாள் முதல் மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினர். இவ்வாறு மக்கள் அரசு சொல்வதை கேட்காமல், நடந்து கொள்வது சரியல்ல என்று பிரதமர் மோடி நேற்று ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்கு அவர் மறுபடியும் தொலைக்காட்சியில், உரையாற்றுகிறார். அப்போது பல முக்கிய உத்தரவுகளை அல்லது வேண்டுகோள்களை அவர் முன்வைக்கக் கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாட்டு மக்களிடம் மீண்டும் உரையாற்ற இருக்கும் மோடி இன்று அதிரடியான உத்தரவுகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் இதனுடைய பாதிப்பு குறித்து அதிகமாக கவலைப்படாததால் மோடி தனது உரையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.