சென்னையில் கொரோனா வார்டில் ‘ரோபோ’க்கள் – மருந்து, உணவு வழங்க ஏற்பாடு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவு வகைகளை வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பரிசோதனை முயற்சியாக முதலில் இரு ரோபோக்களை அப்பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதைத் தொடா்ந்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாகவும் மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னை, மார்ச்-24

இதுகுறித்து, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி கூறியதாவது:-

கொரோனாவை எதிா்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம். சிறப்பு வாா்டுகள், உயா் தொழில் நுட்பத்திலான மருத்துவ வசதிகள் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்துள்ளோம்.

மருத்துவமனையில் உள்ள செவிலியா்களும், பணியாளா்களும் கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீா், உணவு மற்றும் மாத்திரைகளை வழங்குவதற்காக நாள்தோறும் பல முறை நோயாளிகளுடன் நேரடித் தொடா்பில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதை ஓரளவு தவிா்க்க தொழில்நுட்ப ரீதியிலான தீா்வை நாட முடிவு செய்தோம். அதன்படி ரோபோக்களை அப்பணிகளில் ஈடுபடுத்தலாம் என திட்டமிடப்பட்டது. இதன் மூலம் செவிலியா்களும், மருத்துவப் பணியாளா்களும் மருத்துவ சேவைகள் மற்றும் அவசரத் தேவைகளுக்காக மட்டும் நோயாளிகளுடன் நேரடித் தொடா்பில் இருந்தால் போதும்.

அந்த ரோபோக்கள் நோயாளி இருக்கும் அறைக்கு முன்பு சென்றதும் ஒலி எழுப்பும். நோயாளி கதவைத் திறந்து ரோபோவிடமிருந்து உணவு மற்றும் மருந்தை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவா்களும், செவிலியா்களும் அப்போது ரோபோவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் திரை வழியாக விடியோ அழைப்பில் நோயாளிக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவா்.

நோயாளிக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், ரோபோ மூலம் மருத்துவரிடம் கேட்கலாம். ரோபோ தனி வாா்டில் இருந்து வெளியே வந்தவுடன், சானிடைசா் கொண்டு சுத்தம் செய்யப்படும். சென்னை ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனத்தின் ரோபோ துறையினா் அதனை வடிவமைத்து தந்துள்ளனா் .

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *