ரஜினி, மோகன்லால், விஜயசாந்தியை இழுக்க பா.ஜ.க. திட்டம்.

செப்டம்பர்-28

பிரபல நடிகை விஜயசாந்தி மீண்டும் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாகவே, தேர்தல் நேரங்களில் பிரச்சாரத்திற்கு பிரபலங்களை அழைத்து வருவதை அரசியல் கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளன. பா.ஜ.க. நீண்ட நாட்களாகவே தென் இந்திய பகுதிகளில் காலூன்ற முடியாமல் தள்ளாடி வருகிறது. அதனால், தென் இந்திய பகுதிகளில் பிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்ய பா.ஜ.க. முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் ரஜினி, கேரளாவில் மோகன்லால், தெலுங்கானாவில் விஜயசாந்தி என புகழின் உச்சியில் இருக்கும் பிரபலங்களை பா.ஜ.க. நாட தொடங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், என தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து, லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் அளவுக்கு உயர்ந்த ஒரு நடிகை தான் விஜயசாந்தி. 90-களில் அதிகம் பேசப்பட்ட நடிகையான விஜயசாந்தி அப்போதே பா.ஜ.க.வில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இவரின் பிரச்சார பேச்சுக்கு பா.ஜ.க. தலைமையே மகளிர் பிரிவு செயலாளர் பதவியை கொடுத்தது.

அதன்பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து கடப்பா நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எனினும், சோனியா காந்தி பெல்லாரி தொகுதிக்கு மாறியதால், விஜயசாந்தியும் போட்டியில் இருந்து விலகினார். பின்னர், தள்ளி தெலுங்கானா என்ற தனிக்கட்சி ஆரம்பித்த விஜயசாந்தி, 2009 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக்கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயசாந்தி, 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதற்கு பிறகு இவர், தெலுங்கானா காங்கிரசில் நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்து வந்தார்.

தற்போது, மீண்டும் விஜயசாந்தியை தன்வசமே இழுக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மராட்டிய மாநிலத்தில் 20 தொகுதிகள் வரை விஜயசாந்தியை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. மேலும், தெலுங்கானா மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் விஜயசாந்திக்கு என தனி செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மிகப்பெரிய பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி விஜயசாந்தி பா.ஜ.க. வில் இணைக்கப்படவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இதற்காக, பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் விஜயசாந்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயசாந்தி போலவே தமிழகத்தில் ரஜினியை தனக்கு சாதகமாக பா.ஜ.க. மாற்றி வைத்திருக்கிறது. கேரளாவில் மோகன்லாலுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறது.  தென் இந்திய பகுதிகளில் காலூன்ற பிரபலங்களை கையிலடக்கி காய் நகர்த்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *