தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்- முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக பலருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்-23

கொரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத் தொடா் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியதும் கொரேனா பாதிப்பு நிவாரணமாக 82 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதி அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

நிவாரண உதவி மற்றும் பொருட்களை பெறுவதற்காக ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன் முறையில் விநியோகம் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதி 1000 மற்றும் கூடுதலாக 1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும், கட்ட தொழிலாளர்கள், ஓட்டுநர் தொழில் சார்ந்தவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • கொரோனா நிவாரண நிதியாக ரூ.3250 கோடி ஒதுக்கீடு.
 • அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும்.
 • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
 • மார்ச் மாதம் ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் ஏப்ரல் மாதம் வாங்கிக்கொள்ளலாம்.
 • பிற அமைப்புசாரா தொழிலாளர் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசு, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
 • நடைபாதை வியாபாரிகளுக்கு ரேசன் பொருட்களோடு கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும்.
 • கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
 • 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு கூடுதலாக 2 நாள் ஊதியம் வழங்கப்படும்.
 • அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
 • நகர முடியாதவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடி சூடான உணவு வழங்கப்படும்.
 • ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க மாநகராட்சியில் பொது சமையல் கூடம் அமைக்கப்படும்.
 • அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *