புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு; மதுபானக் கடைகள் மூடல்

புதுச்சேரியில் இன்று இரவு முதல் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

புதுச்சேரி, மார்ச்-23

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிதல், நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் சமூக தொற்று பெருமளவில் குறைக்கப்படுகிறது.

அவ்வகையில் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதால், ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அவசியமின்றி பைக்கில் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இன்று மாலை முதல் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும். தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது’ என நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரியில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்க்குமாறும், ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களை மூடவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *