பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

11 ,12ம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சென்னை, காஞ்சி,ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வுக்கு செல்ல சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-23

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டுள்ள கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளித்தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பாக நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது.

வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

நாளையுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச் 26 ஆம் தேதியுடன் பிளஸ் 1 பொதுத் தேர்வுகளும் முடிவடைய உள்ளதால் அதுவரை மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும், முக்கியமாக போக்குவரத்து சேவையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அதன்படி, 10 மணிக்கு தொடங்கும் தேர்வை 10.30 மணிக்கு தொடங்கி 1 30 வரை நடத்த வேண்டும் என்றும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து சேவையை ஏற்படுத்தித் தர வேண்டும். இதை உடனடியாக பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அரசுத் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.அதே சமயம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *