சுய ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றவில்லை – மோடி வருத்தம்

சுய ஊரடங்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா முன்னெச்சரிக்கைக்கான விதிமுறைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். கூட்டம் சேர வேண்டாம், வீடுகளை விட்டு தேவையின்ற வெளியே வர வேண்டாம் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, மார்ச்-23

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரசின் ஆபத்தை பெரும்பாலான மக்கள் இன்னமும் உணராமல் இருக்கிறார்கள். அது வருத்தம் தருகிறது. நேற்று நடந்த மக்கள் சுய ஊரடங்கை கூட பலர் தீவிரமாக கடை பிடிக்கவில்லை.
கொரோனா வைரஸ் மேலும் பரவக்கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு மிக கடுமையான விதி முறைகளை அறிவித்துள்ளது. ஆனால் பலரும் அந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள மருத்துவ விதிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக கடை பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்கள் மருத்துவ விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கிறார்களா? என்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா வைரசின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்படியானால் தான் நாம் அதை கட்டுப்படுத்த முடியும். வீடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பண பரிமாற்றத்துக்கு டிஜிட்டல் மூலம் பணிகளை மேற்கொள்ளுங்கள். இது சமூகத்தில் இருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்குள் இருந்தால்தான் அவர்களையும், அவர்களது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *