கொரோனாவால் ஒரு உயிரைக்கூட இழக்க விட மாட்டோம் – முதல்வர் உறுதி

தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரைக்கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை. மார்ச்-23

சட்டசபையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளில் சந்தித்திராத சவால்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது இருந்தால் பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பவர்கள் அரசுக்கு தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழக மக்கள் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி. பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளித்தனர்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் போதிய வதிகள் உள்ளன. மத்திய மாநில அரசுகள் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரு உயிரைக்கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *