சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் லாக் டவுன்? முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை லாக் டவுன் செய்வது குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார்.

சென்னை, மார்ச்-23

தமிழகத்தில் தற்போது வரை 9 பேருக்கு கொரோனா நோய் பரவி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்று காலை 5 மணி வரை நீடிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க இந்தியாவில் 75 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியது. மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவித்த 75 மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசின் பரிந்துரையை அடுத்து மூன்று மாவட்டங்களின் எல்லைகளை பூட்டி சீல் வைப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

எனவே முதல்வர் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு லாக் டவுன் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *