பிரபல நடிகரும் இயக்குநருமான விசு காலமானார்

பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான விசு இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 74.

சென்னை, மார்ச் 22

தமிழ்த்திரையுலகில் கதாசிரியராக அறிமுகமாகி, பின்பு நடிகர், இயக்குநர் எனத் தன்னை நிரூபித்தவர் விசு. இயக்குனர் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் நடிகர் விசு இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

விசு இயக்கி நடித்த ‘சம்சாரம் அது மின்சாரம்’ பல மொழிகளில் எடுக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான ஃபிலிம் பேர் விருதைப் பெற்றுள்ளது. இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்தவையாக இருக்கும்.

சிறுநீரகப் பிரச்னை காரணமாக நடிகர் விசு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய மனைவியின் பெயர் சுந்தரி. இவருக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என 3 மகள்கள் இருக்கிறார்கள். அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது.

ஏராளமான வெற்றிப்படங்களையும் குடும்பப்படங்களையும் கொடுத்துள்ள விசுவின் மரணம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *