கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஸ்டாலின் கேள்வி? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

 

சென்னை.மார்ச்.21

கொரோனா வைரசை  கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று,  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு மேற்கொண்டுவரும்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
இதுவரை கொரோனா சோதனை செய்யாதவர்கள் கூட பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றார்கள், போர்க்கால அடிப்படையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு அதிகமான தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் என்றும், விதிமுறைகளை தளர்த்தி டெண்டர் இல்லாமல் மருத்துவ உபகரணங்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதனையடுத்து  பேசிய, மு.க.ஸ்டாலின் கடந்த 10ஆம்தேதி டெல்லியிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்த இளைஞரின் நிலை எப்படி உள்ளது? ரயிலில் உடன் பயணித்தவர்கள் யார், யார் என்று விவரம் தெரிந்ததா?.  தமிழகத்தில் கொரோனா பற்றிய உண்மை நிலையை மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாஸ்கர், கொரோனா பாதிப்புடன் ரயிலில் வந்த நபருடன் பயணித்த 193 பேரை தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுவதாக கூறினார். 

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும், மக்கள் அதிகம் கூடும்  இடங்களில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *