அர்ஜென்டினாவில் 31ந் தேதி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை

பியூனஸ் அயர்ஸ். மார்ச் 20

அர்ஜென்டினாவில் அனைத்து மக்களும் வரும் 31-ம் தேதி வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு  உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் தொடங்கி, இத்தாலி,அமெரிக்கா, என பரவி வரும்ம கொரோனா வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும் 9800 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 உலகம் முழுவதும் மனித சமுதாயத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகசுகாதார நிறுவனமும் அனைத்து நாடுகளும்  தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சீனாவில் இந்த வைரசால் புதிதாக யாரும் பாதிப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் இல்லாததால், மக்களை தனிமைப்படுத்தி வைப்பது மட்டும்தான் இப்போதைக்கு சிறந்த நிவாரணம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. எனவே, லேசான வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகள் தவிர எந்த காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.  

இந்நிலையில், அர்ஜென்டினாவில் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்தது நாட்டின் அனைத்து மக்களும் வரும் 31-ம் தேதி வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

‘நள்ளிரவு முதல் மக்கள் அனைவரும் தடுப்பு மற்றும் சமூக தனிமையில் இருக்க வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். இந்த நடவடிக்கை மார்ச் 31 வரை இருக்கும்’ என அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.

‘இந்த நடைமுறையை பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து உறுதி செய்வார்கள். உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியே செல்லலாம். ஆனால், யாராக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறினால் அதற்கான காரணத்தை பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்க வேண்டும்’ என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மற்ற நாட்டு மக்கள் நுழையாதபடி 15 நாட்களுக்கு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *