மத்தியப்பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் ராஜினாமா

 

 போபால்.மார்ச்.20

மத்தியபிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ்  ஆட்சி பெரும்பான்மையை இழந்ததால் முதலமைச்சர்  கமல்நாத் ராஜினாமா செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியா அண்மையில் பாஜ.வில் இணைந்தார். அவருடன் காங்கிரசை சேர்ந்த 22 அதிருப்தி எம்எல்ஏ.க்களும் பதவி விலகினர். இதற்கான ராஜினாமா கடிதத்தை மத்திய பிரதேச சபாநாயகர் பிரஜாபதிக்கு அனுப்பினார். இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதலமைச்சர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் இருமுறை உத்தரவிட்டார். ஆனால், பாஜக பிடியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் விடுவிக்கப்படாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சாத்தியமில்லை என கமல்நாத் கூறி விட்டார். ஆளுநர் உத்தரவுப்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக கூட்டப்பட்ட ஒருநாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தையும், கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி சபாநாயகர் மார்ச் இறுதி வரை ஒத்திவைத்து விட்டார். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி சபாநாயகருக்கும், முதலமைச்சர் கமல்நாத்துக்கும் உத்தர விடக்கோரி மத்திய பிரதேச முன்னாள் பாஜ முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதன் மீதான விசாரணை, நீதிபதிகள் சந்திராசூட், ஹேமந்த் குப்தா அமர்வில் நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மத்தியப் பிரதேச சபாநாயகர் பிரஜாபதி, இன்று சட்டப்பேரவையை கூட்டி மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 22 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத பட்சத்தில், இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் கமல்நாத் அரசுக்கு பெரும்பான்மை கிடைப்பது மிகவும் கடினம். இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்துள்ளார். கமல்நாத் ராஜினாமா செய்துள்ளதால் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *