பொதுத்தேர்வை தள்ளிவைப்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை.மார்ச்.20

தமிழகத்தில்  பள்ளி பொதுத் தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள்  தீவிரப்படுத்தி  வரும் நிலையில் முகக் கவசம்,கிருமி நாசினி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும்  அதனை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வழக்குரைஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர். மனு தொடர்பாக  மார்ச் 20-ம் தேதிக்குள் தமிழக அரசு  பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் சோதிக்கப்பட்ட 222 பேரில் 166 பேருக்குக் கரோனா இல்லை எனவும், 2 பேருக்கு அறிகுறி இருப்பதாகவும், 54 பேரின் மாதிரிகள் சோதனையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 19.30 லட்சம் முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதாகவும், பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா சந்தேகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 044-29510500/400, 9444340496, 8754448477, 104 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்யப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் வந்த ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 780 பயணிகளில் 2,984 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சானிடைசருக்கான மூலப்பொருள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், அதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.. முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவை கிடைப்பதை உறுதி செய்ய எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இருப்பதாகவும் அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தமிழகத்தில் “பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகவும்,தேர்வுகளை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 23 ஆம் தேதித்கு ஒத்தி வைத்த நீதிபதிகள்,  பொதுத்தேர்வு தொடர்பாக அரசுத் தரப்பு விளக்கமளிக்கவும்  உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *