பெரிய ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள் 31–ந் தேதி வரை மூட உத்தரவு

சென்னை.மார்ச்.20

தமிகத்தில் உள்ள பெரிய ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள் இன்று முதல் 31ந்தேதி வரை மூட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து  முதலமைச்சர்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் ஏற்கனவே, வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது மக்கள் அதிகம் செல்லக்கூடிய ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி கொண்ட பெரிய ஜவுளிக் கடைகள், பெரிய நகைக்கடைகள், பல்வகை பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவற்றில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால், இவை நாளை முதல் மூடப்படும். எனினும், நகைக்கடை போன்றவற்றில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டர்படி பொருட்களை பெற்றுச் செல்ல மட்டும் ஒரு தனி வழியை பயன்படுத்தலாம்.

அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் மளிகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கனிக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.பிற மாநிலங்களில் இருந்து நோய் பரவ வாய்ப்புள்ளதால், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதே போல், பிற மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் போக்குவரத்தையும் கணிசமாகக் குறைக்க தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

விமான நிலையங்களில், உள்நாட்டு முனையத்தில் சோதனைகளை தீவிரப்படுத்தவும், மாநிலங்களுக்கு இடையேயான ரெயில் மற்றும் சாலை மார்க்கமாக வரும் பயணிகளை தீவிரமாக சோதனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகள் அறிவுறுத்தப்படுகிறது.

ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வரும் பயணிகளை தீவிரமாக சோதனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.தனிமைப்படுத்தப்பட வேண்டிய பயணிகளை அழைத்துச் செல்வதற்கென விமான நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் சிறப்பு வாகன ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அத்தகைய வாகனங்களை கிருமி நாசினி மூலம் அடிக்கடி தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டுனர்கள் முழு பாதுகாப்புடன் வாகனங்களை இயக்குவதற்கான வசதிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

கிருமிநாசினி தெளிப்பான்கள் மற்றும் பிற உபகரணங்கள் தேவையான அளவு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.அரசு எடுத்து வரும் இத்தகைய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பினை நல்கி, தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசுடன் மக்களும் இணைந்து இந்த கொரோனா வைரஸ் நோயினை வென்று, நோயற்ற தமிழ்நாட்டினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *