ஆதி திராவிடர் குடியிருப்புகளில் குடிநீர், சாலை வசதிக்கு ரூ.2,500 கோடி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை. மார்ச் 19

ஆதி திராவிடர் குடியிருப்புகளில் குடிநீர், இணைப்பு சாலை வசதி ஆகியவற்றிற்காக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று, 110-விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து அறிவித்தார் .

முதலமைச்சர் அறிவித்துள்ள புதிய திட்டங்கள்

ஊரகப் பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் பாதைகளை தரம் உயர்த்தும் பொருட்டு, 2020 -21ஆம் நிதி ஆண்டில் 350 கி.மீ. நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும், 200 கி.மீ. நீளத்திற்கு பேவர் பிளாக் சாலைகளும், 213 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும் ஊரகப் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தவும், நீர்நிலைகளைக் கடந்திடவும் ஏதுவாக 850 குறு பாலங்களும், 350 சிறு பாலங்களும் என மொத்தம் 1,200 சிறு, குறு பாலங்கள் 170 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அதனை செயல்படுத்தும் விதத்தில், 2020 -21ஆம் ஆண்டைய நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், மத்திய, மாநில நிதிக் குழுவின் நிதி மற்றும் அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதி ஆகியவற்றில் இருந்து 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிதியில் இருந்து, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி, இணைப்புச் சாலை வசதி, சிமெண்ட், பேவர் பிளாக் சாலை வசதி, தெருவிளக்குகள், வடிகால் வசதி, மயான மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை பொதுமக்கள் எளிதாக சென்றடையும் வகையில், பிரதான மற்றும் இணைப்புச் சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு, ஆயிரத்து 44 கி.மீ. நீளமுள்ள 299 ஊரகச் சாலைகள் 553.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

ஊரகப் பகுதிகளிலுள்ள குக்கிராமங்கள் மற்றும் இணைக்கப்படாத பகுதிகளுக்கு இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்திட, 2020 -21ஆம் நிதி ஆண்டில், 1,150 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் 246 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ஊரகப் பகுதிகளிலுள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே 2020 -21ஆம் ஆண்டில் 10 ஆயிரம் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணைகள் 460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

 ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிக்கட்டடங்களுக்கு 2020 -21ஆம் நிதி ஆண்டில் 650 கி.மீ. நீளத்திற்கு 440 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

ஊரகப் பகுதிகளில் கால்நடைகளை பாதுகாத்திட, 2020 -21ஆம் நிதியாண்டில், 9 ஆயிரம் மாட்டுக் கொட்டகைகளும், 6 ஆயிரம் ஆட்டுக் கொட்டகைகளும் என மொத்தம் 15 ஆயிரம் கொட்டகைகள் 258.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

 விவசாய நிலங்களில் பாசன வசதிகளைப் பெருக்கி, விளைநிலங்களின் பரப்பினை அதிகரிக்க, 2020 -21ஆம் ஆண்டில் 500 தனி நபர் கிணறுகள் தலா 7 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 500 சமுதாய கிணறுகள் தலா 12 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் ஆயிரம் கிணறுகள் 98 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

30 ஆண்டுகள் கடந்த நிலையில், மிகவும் பழுதடைந்து, பயன்பாடின்றி உள்ள 500 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு தலா 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

2019 -20ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 2020 -21ஆம் ஆண்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 2020 -21ஆம் நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் முதியோர் பயன் பெறும் வகையில், 5 முதல் 10 உறுப்பினர்களைக் கொண்ட 12 ஆயிரத்து 525 முதியோர் சுய உதவிக் குழுக்கள் ஊராட்சிக்கு ஒன்று என்ற அளவில் ஏற்படுத்தப்பட்டு, ஆதார நிதி-யாக குழு ஒன்றுக்கு 15,000 ரூபாய் வீதம் 18 கோடியே 79 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *