கொரோனா வைரஸ் விழிப்புணர்வு : சளைக்காத பிரச்சாரத்தில் அமைச்சர் வேலுமணி

சென்னை  மார்ச் 17.

கொரோனா வைரஸ்  குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுத்தமான கரங்களே,சுகாதாரத்தின் வரங்கள் என்ற பெயரில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு டிஜிட்டல் பிரச்சாரத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி மேற்கொண்டுள்ளார்.

 தமிழக உள்ளாட்சித்துறை சார்பில்  சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அமைச்சர் வேலுமணியின் உத்தரவின்பேரில்  கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது  ட்விட்டர் பக்கத்தில் சுத்தமான கரங்களே,சுகாதாரத்தின் வரங்கள் என்ற பெயரில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்.சுத்தமும் சுகாதாரமும் நம் கையில் என்பதை வலியுறுத்தும் இந்த பிரச்சாரத்தின் மூலம், சுத்தமாக இருப்பது நமக்கும், நம் குடும்பத்திற்கும், நம் சமூகத்திற்கும் நாம் செய்யும் மிக முக்கிய கடமை என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனித்திரு தவிர்த்திடு என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதிவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்திட வேண்டும் என்றும்  மக்கள் கூட்டத்தை தவிர்த்து தனித்திருப்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பதை  வலியுறுத்துவதாக உள்ளது.  மேலும் கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ,பாதிப்பு உள்ளது என்ற சந்தேகம் இருந்தாலோ,அதற்கேற்ற சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தி உள்ளார்.

இதன்தொடர்ச்சியாக Maintain Social Distance   என்ற கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பதிவை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ட்விட்டரில்  வெளியிட்டுள்ளார்.

 கைகொடுப்பது,கட்டிப்பிடிப்பது,உள்ளிட்ட நடவடிக்கைகளை நாம் தவிர்ப்பது  போன்றவை கொரோனா நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த  உதவும் என்பதை இதன் மூலம் அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் ஆயத்தமானால் போதும் அச்சம் எதற்கு? என்ற மற்றொரு விழிப்புணர்வு குறித்த பதிவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா குறித்து தேவையற்ற அச்சத்தை மக்கள் தவிர்க்க வேண்டும், வருமுன் காப்போம் என்ற வகையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினால்  தேவையில்லாத பயத்தை தவிர்க்க முடியும், கைகளை சுத்தமாக வைப்போம், பொறுப்புடன் செயல்படுவோம். இது அச்சம் கொள்ளும் நேரமல்ல, சுத்தம் வெல்லும் நேரம் என்று அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *