நாங்குநேரியில் ரூபி மனோகரனுக்கு சீட் கிடைத்தது எப்படி?

செப்டம்பர்-28

காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் பல மூத்த தலைவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் ரூபி மனோகரனுக்கு சீட் கொடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து பார்க்கலாம்…

தமிழகத்தில் காலியாக உள்ள நங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், திமுகவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போராடி நாங்குநேரி தொகுதியை பெற்றது.  அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்த நிலையில், காங்கிரசில் மட்டும் தொடர் இழுபறி நீடித்தே வந்தது.

மேலும், தொகுதிக்கு பணத்தை தாரளமாக செலவு செய்யவும், அதே நேரத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைமை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவரான ரூபி மனோகரனுக்கு நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு காங்கிரசின் மேலிட தலைமையான சோனியா காந்தி எடுத்துள்ளதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல மூத்த தலைவர்கள் சீட் கேட்டும் அவர்களுக்கு கொடுக்காமல் ரூபி மனோகரனுக்கு கொடுத்ததில் பல பின்னணிகள் இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், காப்புக்காடு பகுதியை பூர்வீகமாக கொண்ட ரூபி மனோகரன், சென்னையில் கட்டுமான தொழிலில் மிகப்பெரிய சக்கரவர்த்தி என்றே கூறலாம். இவர் தான் ரூபி பில்டர்ஸ் குழுமத்தின் தலைவரும் ஆவர். 60 வயதான இவர், சிறு வயதிலேயே தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, கட்சியிலும் சரி பல பொறுப்புகளை வகித்துள்ளார் ரூபி மனோகரன். இதுமட்டுமின்றி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் விமான நிலைய ஆணையத்தில் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.

இவரது கட்டுமான நிறுவனம் 22 ஆண்டுகளில் 185 குடியிருப்புகளுக்கு மேல் கட்டிக்கொடுத்துள்ளது. கட்டுமான தொழில் பற்றி மற்றவர்களும் தெரிந்துகொள்வதற்காக, நீங்களும் ஆகலாம் பில்டர்ஸ் என்ற தலைப்பில் புத்தகமும் வெளியிட்டுள்ளார். குமரி மாவட்டம் குன்னத்தூரில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதைதவிர அவர், லயன்ஸ் கிளப் போன்றவற்றிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் உரிமையாளரும் இந்த ரூபி மனோகரன் தான். தொழிலில் இவ்வளவு பணத்திற்கு அதிபதியான, மனோகரன் காங்கிரசில் உள்ள மேலிட தலைவர்களுக்கும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. குறிப்பாக, நாங்குநேரி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து எம்.பி.யான வசந்தகுமாரின் உறவினர் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்களில் ரூபி மனோகரனும் ஒருவர் ஆவார். நாங்குநேரியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான வசந்தகுமாரின் அந்த தொகுதிகள் மக்களுக்கு பல நல உதவிகளை செய்துள்ளார். அதன் அடிப்படையில், தாம் ஓட்டு கேட்டு மனோகரனை வெற்றி பெற வைக்கிறேன் என வசந்தகுமார் காங்கிரஸ் மேலிடத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *