குடிமராமத்து பணிகளுக்கு டெண்டர் கிடையாது : விவசாயிகளால் பணிகள் மேற்கொள்ளப்படும் – முதல்வர் பழனிசாமி

சென்னை.மார்ச்.18

2020–2021ம் ஆண்டில் 34 மாவட்டங்களில் 1364 குடிமராமத்து பணிகள் ரூ.490.70 கோடி மதிப்பீட்டில் முழுக்க முழுக்க விவசாயிகளை வைத்து மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விக்கு   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசினார். விவசாய பெருமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று குடிமராமத்து பணிகளை எங்களுடைய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இன்றைக்கு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14,000 ஏரிகளில் படிப்படியாக குடிமராமத்து திட்டத்தின் மூலமாக சரி செய்து பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த திட்டத்தை கொண்டு வந்தோம்.

முதல் ஆண்டு, குடிமராமத்து திட்டத்தை 2016–17ம் ஆண்டில் முதல் முதலாக இந்த திட்டத்தை கொண்டு வந்தோம். பரிட்சாத்த முறையில் 100 கோடி ரூபாய் ஒதுக்கி, 1513 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு விவசாய பெருங்குடிமக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுமக்களிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.2017–18ம் ஆண்டில் 30 மாவட்டங்களில் 331.07 கோடி ரூபாய் மதிப்பீட்டிலே 1523 பணிகள் அறிவிக்கப்பட்டு, 1463 பணிகள் நிறைவடைந்துள்ளன. 15 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 45 பணிகள் பல்வேறு காரணங்களினால் கைவிடப்பட்டு இருக்கின்றன.

2019–2020ம் ஆண்டில் 499.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1829 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1094 பணிகள் முடிவடைந்துள்ளன, 718 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன, பல்வேறு காரணங்களுக்காக கைவிடப்பட்டுள்ள 17 பணிகளுக்கு மாற்றாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 3.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 குடிமராமத்து பணிகளை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக 3 ஆண்டுகளில் பொதுப்பணித் துறையின் மூலமாக பராமரிக்கப்படுகின்ற ஏரிகளில் 4865 பணிகள் 930.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வருகின்ற 2020–2021ம் ஆண்டில் 34 மாவட்டங்களில் 1364 குடிமராமத்து பணிகள் 490.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். முழுக்க முழுக்க விவசாயிகளை வைத்து தான் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். டெண்டர் விடுவதே கிடையாது. நீர்பாசன சபை, விவசாய சங்கங்கள், ஏரி பாசனம் பெறுகின்ற அந்த விவசாயிகளை உள்ளடக்கி இந்தப் பணிகளை மேற்கொள்கின்றோம். இந்தப் பணிகளை பொறுத்தவரைக்கும் அற்புதமான திட்டம், குடிமராமத்து திட்டம். இந்த திட்டம் நிறைவேறுகின்ற போது முழுமையாக 14,000 ஏரிகளும் தூர் வாரப்படுகின்ற போது, இன்றைக்கு பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்கும். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் என்ற அடிப்படையிலே இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றோம். அதுவும் ஒரு ஏரிக்கு எவ்வளவு செலவாகுமோ, அவ்வளவு செலவையும் இப்பொழுதே அதிலே குறிப்பிடுகின்றோம். முன் எல்லாம் பரிட்சார்த்த முறையிலே ஓரு ஏரிக்கு 10 லட்சம் ரூபாய் தான் கொடுப்போம். இப்போது அதை மாற்றி ஒரு ஏரிக்கு எவ்வளவு செலவாகும், கரையை பலப்படுத்துவது, வரத்து வாய்க்கால், மதகுகளை சரி செய்தல், இப்படி எல்லா வகையிலும் பொதுப்பணித் துறை மூலமாக மதிப்பீடு போட்டு அதனை விவசாயிகளிடத்தே கொடுத்து, இப்பணிகளை விவசாயிகளே மேற்கொள்வார்கள்.

அனைத்து ஏரிகளும் எடுத்துக் கொள்ள வில்லை. நாம் 14,000 ஏரிகளில் இதுவரை 4865 ஏரிகளை தான் நாங்கள் எடுத்து இப்பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றைய முன் தினம் கூட, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஏரிகளும் இதேபோல குடிமராமத்து திட்டத்தின் கீழ் செய்ய வேண்டும் என்று மக்களிடத்திருந்தும், விவசாயிகளிடத்திருந்தும் கோரிக்கை வந்ததன் அடிப்படையில் 1250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்தப் பணிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *