சுத்தமான கரங்களே,சுகாதாரத்தின் வரங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை  மார்ச் 17.

கொரோனா வைரஸ் இந்த பேரைக் கேட்டாலே அதிர்வலைகள் ஏற்படுகிறது. இந்த வைரஸ் யாரையும் எப்போதும் தாக்கும் என்ற அச்சம்தான் உலகையே இன்று கலங்க வைத்திருக்கிறது. இந்த சூழலில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை  அறிவுறுத்தலின்படியும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது  ட்விட்டர் பக்கத்தில் சுத்தமான கரங்களே,சுகாதாரத்தின் வரங்கள் என்ற பெயரில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்.சுத்தமும் சுகாதாரமும் நம் கையில் என்பதை வலியுறுத்தும் இந்த பிரச்சாரத்தின் மூலம், சுத்தமாக இருப்பது நமக்கும், நம் குடும்பத்திற்கும், நம் சமூகத்திற்கும் நாம் செய்யும் மிக முக்கிய கடமை என அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேநேரத்தில்  சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாநகராட்சிகளிலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள, ஏடிஎம் மையங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும், மாநகராட்சி சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு, கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, துண்டு பிரசுரங்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவும் விதம், நோயின் அறிகுறிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள், கை கழுவும் முறைகள் ஆகியவை குறித்து  துண்டுபிரசுரங்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்  அச்சடிக்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களால் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.  மேலும், வீட்டில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் இருக்கிறதா என்பதை அறிய சுகாதார பணியாளர்கள் கள ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில், ‘கொரோனா’ தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ‘டிஜிட்டல்’ பலகை மூலம் மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பேரூந்து நிறுத்தங்கள், ரயில்நிலையங்கள், உட்பட, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் வீதிகளில் ‘பிளீச்சிங் பவுடர்’ தூவப்படுகிறது.மாநகராட்சி சுகாதார துறையினர் உட்பட, 800 பேர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிங்காநல்லுார், காந்திபுரம், உக்கடம் என, அனைத்து பேருந்து நிலையங்கள்,பேரூந்துகள், ரயில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.சத்தி சாலையில் உள்ள மால்கள், கோவில்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிருஷ்ணகிரி,தர்மபுரி,கன்னியாகுமரி,நெல்லை,தென்காசி,வேலூர்,நீலகிரி,கோவை,தேனி,திருப்பூர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவல்ர்கள் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்,  பேரூராட்சிகள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து, ‘பிளீச்சிங் பவுடர்’ தூவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பிளிச்சிங் பவுடர்  தூவுதுல்,கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகளில்  மாநகராட்சி மற்றும் நகராட்சி, பணியாளர்கள் என அனைவ்ரும் பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகின்றனர்.  பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள்  வழங்கி மாநகராட்சி மற்றும் நகராட்சித்துறை ஊழியர்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். மறுஉத்தரவு வரை இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது சுகாதாரம் கருதி கல்வி நிறுவனங்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுமுறை அறிவித்துள்ளார்.இதனை மீறி யாராவது பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆணையிட்டுள்ளார்.ஒட்டுமொத்தத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் , தமிழகத்தை விழிப்புணர்வு மிக்க மாநிலமாக்கும் முயற்சியில் தமிழக உள்ளாட்சித்துறை தீவிரமாக களமிறங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *