இந்தியாவில் கொரோனா வைரசுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

டெல்லி.மார்ச்.17

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு 3 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 125 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் இந்தியாவிலும்கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கேரளா மாநிலத்தில் முதன்முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.

மகாராஷ்டிரா, கேரளா, அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, காஷ்மீர், லடாக், தமிழ்நாடு, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 14 மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டு  சிகிச்சைப் பெற்றுவந்த 64 முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்தார். ஏற்கனவே இந்தியாவில் கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவரும், டெல்லியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 24 பேருக்கும், அரியானாவில் 14 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 13 பேருக்கும், தெலுங்கானாவில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *