இந்தியாவிலேயே குடிநீர் வழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது : சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி

சென்னை.மார்ச்.16

இந்தியாவிலேயே குடிநீர் வழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், உள்ளாட்சித்துறையில் 123 தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்திருப்பதாகவும்  சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. கொறடா சக்கரபாணி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தார்கள். இப்போது அது 3 ஆயிரமாக குறைந்துள்ளது. வாரியத்தை மூடிவிட்டு தனியாருக்கு கொடுக்க அரசு முயற்சிப்பதாக தெரிகிறது என்று கூறினார்.

தி.மு.க. செய்த சாதனைகளைவிட 3 மடங்கு சாதனைகளை அதிமுக அரசு செய்திருக்கிறது.

இதற்கு பதிலளித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது., தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளைவிட 3 மடங்கு அதிக சாதனைகளை அதிமுக அரசு செய்திருக்கிறது. இந்தியாவிலேயே குடிநீர் வழங்குவதில் அம்மாவின் அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும் செய்துள்ள சாதனைகள் அதிகம். குடிநீர் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

குடிநீர் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

அம்மாவின் ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் ரூ.39 ஆயிரத்து 849 கோடியில் 4.58 லட்சம் பணிகள் நடைபெற்று இருக்கின்றன. கிராமங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டபோதும் அதனை மிகவும் திறமையாக சமாளித்தோம்.

தமிழகத்தில் கிருஷ்ணா தண்ணீரை பெற என்னையும் அமைச்சர் ஜெயக்குமாரையும் முதலமைச்சர் ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தார். அதன் பயனாக 6.4 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தது. அதனை ஆந்திர அரசு குறைத்தது. எனவே மீண்டும் எங்களை முதலமைச்சர் அங்கு அனுப்பி வைத்தார். அதன் பயனாக சென்னைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கிறது.

குடிநீர் வடிகால் வாரியத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.

 எம்.ஜி.ஆர். கொண்டு வந்த ஒக்கேனக்கல் குடிநீர் திட்டம் ரூ.120 கோடியில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. அம்மா ஆட்சிக்கு வந்தபின் அந்த திட்டத்திற்கு ரூ.350 கோடி திருத்திய மதிப்பீடு செய்து பணிகளை துவக்கினார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 18 சதவீத பணிகள் தான் நடைபெற்றது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் 29.5.2011 அன்று இந்த திட்டத்தை  அம்மா துவக்கி வைத்தார். குடிநீர் வடிகால் வாரியத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. எந்த வாரியமும் மூடப்படமாட்டாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

16.36 லட்சம் பசுமை வீடுகள்

தொடர்ந்து சக்கரபாணி பேசுகையில், பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்க 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்கள். இந்த தொகையில் வீடுகளை எப்படி கட்ட முடியும். வீடுகளை கட்டுபவர்கள் கடனாளி ஆகிவிடுகிறார்கள் என்று கூறினார்.  இதற்கு  பதில் கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உங்கள் ஆட்சியில் 75 ஆயிரம் ரூபாய் தான் வீடு கட்ட கொடுத்தீர்கள். இப்போது நாங்கள் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். இந்தியாவிலேயே அதிகமாக வீடுகளை கட்டிக் கொடுத்தது அம்மாவின் அரசு தான். மொத்தம் 16.36 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் (2006–2011) உள்ளாட்சிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 266 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

2011–2016 அம்மாவின் ஆட்சியில் ரூ.19 ஆயிரத்து 896 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 3 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் ரூ.17 ஆயிரத்து 12 கோடி வழங்கியிருக்கிறோம். உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது அம்மாவின் ஆட்சியில் தான்.

வீடு கட்டி கொடுப்பது பற்றி சொல்கிறீர்கள். உங்கள் ஆட்சியில் 75 ஆயிரம் ரூபாய் எப்படி வீடு கட்டினீர்கள். மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெறும் இந்த திட்டத்தில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் அதிக நிதியை வழங்கி உள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

உள்ளாட்சித்துறையில் 123 தேசிய விருதுகள் பெற்று சாதனை

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலி வங்கியில் செலுத்தப்படுகிறது. கூலி வேலை செய்வர்கள் வங்கிக்கு சென்று பணத்தை  எவ்வாறு எடுக்க முடியும் என்று சக்கரபாணி கேட்டார்.

இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பதிலில், இது மத்திய அரசின் திட்டம். மத்திய அரசு நேரிடையாக வங்கியில் பணத்தை செலுத்திவிடுகிறது.

உள்ளாட்சித்துறையில் இந்த அரசு எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிறது. எனவே 123 தேசிய விருதுகளை வாங்கியிருக்கிறோம். இப்போது மத்தியில் உள்ள பாரதீய ஜனதா ஆட்சியில் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் இந்த விருதுகளை வாங்கியிருக்கிறோம். தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம் என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *